Wednesday, August 3, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 3

           இப்படி நமக்கென்று ஒரு பாரம்பரியமும், வேத, புராணங்களில் அதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன. ஆகம சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம் போன்ற சாஸ்திரங்களுக்கு நாம்தான் சொந்தக்காரர்கள். இந்தியாவில், மேற்கூறிய சாஸ்திரங்களை முறையாக கடைபிடித்து வடிவமைக்கப்பட்ட கோவில்களே உலகப்புகழ் வாய்ந்ததாக இருக்கிறது.  இப்படி எல்லாவற்றிலும் மிகச் சிறந்த வல்லுனர்களாக இருந்த நாம், குறிப்பிட்ட சில சமூகத்தினரின் காழ்ப்புணர்ச்சியால், அவர்களுக்கு மன்னர்களிடம் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, அவர்கள் செய்த அரசியலால், நாம் ஒதுக்கப்பட்டோம்.  நம் இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வல்லுனர்கள் கொல்லப்பட்டனர். வரலாறும் இதனை மறைத்து விட்டன. வரலாறு தொல்பொருள் ஆய்வு மூலமே கிடைக்கிறது. பெரும்பாலான கல்வெட்டுகள் அரசர்களின் ஆணையின் படியே எழுதப்பட்டன. அரசர்கள் விஸ்கர்மாக்களின் படுகொலைகளை எவ்வாறு எழுதுவர்? அதனால் நம் இன வரலாறு, கலைக்காக நாம் செய்த தியாகங்கள்  மறைக்கப்பட்டு விட்டன.  நம் இனத்தால் கோவில்கள், அரண்மனைகள் வடிவமைக்கப்பட்டு,  நிர்மாணிக்கப்பட்டவுடன், வேலை முடிந்தவுடன், அவர்களை பொதுமக்கள் முன் பாராட்டுவது போல் பாராட்டி, பரிசுப் பொருட்களை கொடுத்து மறு நாளே அவர்களை கொன்று விடுவார்கள். அதற்கு பயந்து எத்தனையோ குடும்பங்கள் ஊர் விட்டு, ஊர் போய் நாடோடியாக திரிந்தனர். மொத்தத்தில் நம்முடைய அறிவு, தொழில் திறமையை சுரண்டி, காரியம் சாதித்த பின் விலங்கிற்கும் கேவலமாய் நம்மை நடத்தினர். விலங்குகளுக்கு உள்ள ஒரு சுதந்திரம் கூட நமக்கு கிடைக்கவில்லை. வெட்கக்கேடு !

           இதற்கு காரணம், இதைப்போல ஒரு சிறந்த கலைப்படைப்பு வேறு எந்த நாட்டிலும் இருக்கக் கூடாது என்ற அரசர்களுக்கே உரித்தான ஆணவமே ! இந்த கட்டிடக்கலை வல்லுனரை உயிரோடு விட்டால், இதை விட சிறந்த கலைப்படைப்பை வேற நாட்டில் செய்து விடுவார் என்று அவருக்கு அருகில் உள்ள வேறு சமூகத்தினர் போட்டு விட்டதன் விளைவே, விஸ்கர்மா இனத்தின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்தது. ஏனென்றால் தமது இனத்திற்கு இணையாக சாஸ்திரம் அறிந்தவர்கள் இவர்களே என்ற பொறாமை உணர்வும்  காரணமாக இருந்திருக்கலாம். இவர்களை “தாம் வாழ பிறரைக் கெடுத்தவர்கள்” என்று கூறினால் அது மிகையாகாது.

           ஆண் குழந்தைகளைப் பெற்ற தாய் ஆனந்தம் அடைவதற்கு பதில் அழுது புலம்பும் நிலை ஏற்பட்டது. அரசர்கள் நம் இன வாரிசுகளையும் விட்டு வைக்கவில்லை. அதனால் விஸ்கர்மாக்களில் பலர் குடும்பத்தை மறைத்து, குடும்பத்தை விட்டு விலகி  வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற எல்லா சமூகத்தினரும் கூட்டம் கூட்டமாக கூடி வாழ்ந்த போது, நாம் மட்டும் நாடோடி வாழ்க்கை வாழ நேரிட்டது.

           இப்பொழுதும் நீங்கள் காணலாம், ஒரு கிராமத்தில் நூற்றுக்கு ஒரு குடும்பம் மட்டுமே நம் இனத்தினர் இருப்பதைக் காணலாம். மற்ற ஜாதியினர் 40, 50 குடும்பங்கள் இருக்கும். ஏனென்றால் அவர்கள் ஒரே இடத்தில் ஒரே இனமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நம் இன ஆண்கள் அரசர்களுக்கு பயந்து, குடும்பத்தை மறைத்து, குடும்பத்தை விட்டு விலகி, நாடோடியாக வாழ்ந்தமையால் இன்று மக்கள் தொகையில் விஸ்கர்மா இனத்தின் சதவீதம் மிகக்குறைவாகவே உள்ளது.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !
நாயைக் கண்டால் கல்லைக் காணோம் ! 
          என்ற பழமொழியின் பின்புலத்தை ஆரோய்ந்தொமெனில், நம் இனத்தவரின் திறமை விளங்கும். கல்லில் கலைவண்ணத்துடன் நாயின் உருவத்தை செதுக்கியபின், நாயின் உருவத்தைக் காணும்போது, நாயின் தத்ரூபமான உருவம் தான் தெரியுமே தவிர அது ஒரு கல் என்று நினைக்கத் தோன்றாது. அதைப் போல கல்லின் தன்மை, நிறம் போன்றவற்றை காணும் போது அது ஒரு கல்லாகத்தான் தெரியுமே தவிர நாயாகத்தெரியாது. இது தான் இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம்.

இதைப்போல, இனி எந்த கோவிலை கண்டாலும், அதன் அழகை மட்டுமே காணாமல், அதில் மறைந்திருக்கும் நம் இனத்தவரின், திறமை, உழைப்பு, அவர்கள் செய்த உயிர்த் தியாகம் போன்றவற்றையும் மனதில் காணுங்கள். இதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

           நம்முடைய இனம் ஒரு வஞ்சிக்கப்பட்ட இனம்.

           இன உணர்வு கொள் !! 

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க