Wednesday, January 4, 2012

தங்க நகைகளுக்கு இனி 'ஹால்மார்க் முத்திரை' கட்டாயம்!

நுகர்வோர் நலன் கருதி, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1986 ஆம் ஆண்டின் இந்திய தரச் சட்டத்தில் (Bureau of Indian Standards-BIS) திருத்தம் கொண்டு வர ஒப்புதல் கொடுத்துள்ளது.


ஹால்மார்க் வந்தது எப்படி? 

தங்கத்தின் மீது ஹால்மார்க் முத்திரை பதிக்கும் வழக்கம் 13 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் தொடங்கியது. பின்னர் அது இங்கிலாந்துக்கு பரவி லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற பொற்கொல்லர் அரங்கில் (Goldsmiths' Hall) வழக்கமானது. இந்த பொற்கொல்லர் அரங்கில்தான் தங்கத்தின் சுத்தத்துக்கான பொற்கொல்லர் 'முத்திரை' அந்த காலத்தில் பதிக்கப்பட்டு வந்தது. அந்த Goldsmith's Hall என்ற சொல்லே காலப்போக்கில் மருவி Hallmark என்றாகிவிட்டது.


கேரட்


சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.




யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.


 சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த  'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.)  அலுவலகம் இருக்கிறது. 





No comments: