Wednesday, July 6, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 1

சாதி பெயரை சொல்லி, எவர் ஒருவரும், சுரண்ட நினைத்தாலோ, சுய நல அரசியல் செய்ய நினைத்தாலோ அது தவறாகும். சேவை செய்ய நினைப்பதில் தவறேதுமில்லை. விமானத்தில் பயணம் செய்யும் பொழுது விபத்து நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று பாதுகாப்பு குறித்து விளக்கம் தருவார்கள். அதில் முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு பிறகு தான் உங்களின் குழந்தைகளை நோக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில் பெரியவர்கள் விரைந்து செயல்பட்டால், அவர்களும், அவர்களால் குழந்தைகளும் பாதுகாக்கப்படுவார்கள். இதில் எங்கே வந்தது சுய நலம். புத்திசாலித்தனமே உள்ளது, சுய நலம் இல்லை. நெருடல் தேவையில்லை. அதைப்போலவே முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், பிறகு உங்கள் உறவினர்களை பாதுகாக்கவும், உறவினர்கள் என்று வரும்போது ஜாதி வந்துவிடுகிறது. அதன் பின் தாங்கள் சார்ந்த தாய் மொழியினருக்காக ஏதாவது செய்ய இயலுமா என்று பார்க்கவும், பிறகு ஒட்டு மொத்த இந்தியாவுக்காக தாங்கள் ஏதாவது செய்ய இயலுமா என்று முயற்சிக்கலாம். இது ஜாதிக்கு மட்டுமல்ல மதத்திற்கும் பொருந்தும். முதலில் வினாயகர், முருகன், சிவன் முதலிய கடவுளர்க்கு பல வழிபாட்டு பாடல்களைப் பாடிய அருட்பிரகாச வள்ளலார் பிறகு, ஜாதி மதத்தை கடந்து, சமரச சன்மார்க்க நெறியை பரப்ப விழைந்தார். அருட்பெரும் ஜோதியை வழிபட சொல்லி திருவருட்பா அருளினார். இதனை சமயாதீத நிலை என்று கூறுவர். தாயுமானவர் நிலையும் சமயாதீத நிலைதான். ஜாதி, சமயம், சமயாதீதம் என்பது தான் வரிசைக்கிரமம். அதனால் தங்களுக்கு ஏற்பட்ட நெருடல் அவசியம் இல்லாத ஒன்று என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. 

வரப்புயர நெல் உயரும் ! 
நெல் உயர குடி உயரும் ! 
குடி உயர கோன் உயர்வான் ! 
----என்பது ஆன்றோர் வாக்கல்லவா?

மேலும் சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்று தேவநேயப் பாவனர், மறைமலை அடிகளார் போன்ற தனித்தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகப்பொதுமறையாம், தமிழ்த் திருமறையாம் திருக்குறளை எழுதிய அய்யன் வள்ளுவனே முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்று கூறியுள்ளார்.  இதில் வரும் உலகு என்ற சொல்லானது லோகம் என்ற வட மொழிச்சொல்லின் மரூஉ என்றும், ஆதி, பகவன் என்ற சொற்களும் வட மொழி சொற்களே என்றும் சமஸ்கிருத ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை தமிழறிஞர்கள் மறுத்துவருகின்றனர்.  சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்பது அவர்களின் நிலைப்பாடு. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் அகத்தியரின் பிரதம சீடர் ஆவார். தமிழில் அகத்தியர் எழுதிய அகத்தியத்தின், தொடர் நூலே தொல்காப்பியம் என்றும் கூறுவர். இதே அகத்தியர் சமஸ்கிருதத்திற்கும் இலக்கண நூல் எழுதியுள்ளார். 

நான் ஏன் தமிழ் விஸ்கர்மா என்று வலைப்பூவிற்கு பெயர் வைத்தேன் என்பதை அறிமுகப் பதிவிலேயே சொல்லியிருப்பேன். தமிழ்மொழியை ஒரு தகவல் பறிமாற்ற உறவுப்பாலமாகவே கருதுகிறேன். வேறு எந்த நோக்கமுமல்ல.

விஸ்கர்மா என்ற சொல் 5 தொழிலுக்கும் பொருந்தும். கொல்லன், தச்சன் என்று பிரிக்கவேண்டாம் என்ற உயர்ந்த நோக்கமும் அதில் அடங்கியுள்ளது. அதனால் நண்பரே வீண் வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நம்முடைய சமூகத்திற்கு தங்களால் இயன்ற சேவையை செய்யுமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.



அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க 

3 comments:

அவனி அரவிந்தன் said...

சிரத்தையுடன் பதில் எழுதியதற்கு நன்றி ! ஜாதி, சமயம், சமயாதீதம் என்று நீங்கள் சொன்னபடியே பார்த்தாலும் நீங்கள் முதல் நிலையில் இருந்து பேசுகிறீர்கள் நான் மூன்றாம் நிலையில் இருந்து கேட்கிறேன். முதல் நிலை கடக்கப்பட வேண்டியது. மூன்றாம் நிலை அடையப்பட வேண்டியது. எப்போதும் நம்முடைய பயணம் அடையப்பட வேண்டியதை நோக்கியே இருக்க வேண்டும். விவாதிப்பது என் நோக்கமல்ல. விளங்க வைக்கவே விரும்புகிறேன் - அன்புடன் அரவிந்தன். (நான் சாதி சார்பற்ற மனிதநேயம் கொண்ட சாதாரண மனிதன் என்று சொல்வதிலேயே மிக்க பெருமை அடைகிறேன்)

tamizhviswakarma said...

மிக்க மகிழ்ச்சி! நம்மில் பலர் கடக்க வேண்டிய விஷயங்கள், தொலைவுகள் ஏராளம். முதல் இரண்டு படிகளை கடந்து, மூன்றாம் படியில் தாங்கள் நிற்பது கண்டு பெருமைப்படுகிறோம். முதல் இரண்டு படிகளில் செய்ய வேண்டிய கடமைகள் எங்களுக்கு ஏராளமாக இருப்பதால், அதனை செய்து விட்டு மூன்றாம் நிலையில் தங்களை சந்திப்போம். மூன்றாம் நிலையை குறித்து, அடையக்கூடிய இலக்கை குறித்து, அறிந்து வைத்திருப்பதால் தான், என்னால் அதனை எழுத முடிந்தது.தங்களின் மனிதநேய உணர்வை நான் மதிக்கிறேன். இந்த மனிதநேய உணர்வை வைத்து, தாங்கள் இந்த மனித குலத்திற்கு ஆற்றிய பணிகள், உதவிகள், நற்செயல்கள் என்னவென்று பட்டியலிட்டால் மிக நல்லது. நாங்களும் உங்களுடன் கைகோர்க்கிறோம். மூன்றாம் நிலையை தாங்கள் அடைந்துவிட்டதாக (நீங்கள் முதல் நிலையில் இருந்து பேசுகிறீர்கள் நான் மூன்றாம் நிலையில் இருந்து கேட்கிறேன்..) கூறியுள்ளீர்கள். மூன்றாம் நிலையை அடைய தாங்கள் மேற்கொண்ட முயற்சி யாது என்றும் கூறினால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தங்கள் நிலையை தெளிவுபடுத்தியதற்கு நன்றி!

அவனி அரவிந்தன் said...

ஸ்னேகம் என்ற அமைப்பின் மூலம் குக்கிராமங்களில் உள்ள அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணிணி, சுயமேம்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுக்கிறோம். தமிழரைக் காப்போம் என்ற இயக்கத்தின் மூலம் மீனவ படுகொலைகள், ஈழப்பிரச்சினை, இளைஞர்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வூட்டுதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம். இணைய ஊடகங்களில் எழுதுவதும் உண்டு. ஒரு குழந்தையின் வருட படிப்புச் செலவை ஏற்கிறேன். மேலும் என்னால் முயன்ற அளவு சொந்தங்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உதவுகிறேன். இதையெல்லாம் சாதி சார்பற்று என்னால் செய்ய முடிகிறது. நீங்கள் செய்வது உன்னதமான சேவை. அது ஒரு சாராருக்கு மட்டும் சென்றடைவது தான் என் மனக்குறை. சரி பரவாயில்லை. பின்வரும் நாட்களில் உங்கள் சேவை மற்ற பிரிவினருக்கும் பரவட்டும். மூன்றால் நிலையை அடைய பெரு முயற்சி எதுவும் தேவையில்லை. எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் மனம் இருந்தால் போதும் என்று நான் ஆசிரியராக மனதில் கொண்டவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நன்றி !